Categories
மாநில செய்திகள்

“பிரசவம் பார்ப்பது நூடுல்ஸ் செய்வது போல கிடையாது”….  அன்புமணி ராமதாஸ் கருத்து….!!!

யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் “அரக்கோணம் பக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது. தாயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மகப்பேறு என்பது மிகவும் சிக்கலானது. சிறிய தவறு நடந்தாலும் தாய்-சேய் இருவருக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தும். யூடியூப் பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பது நூடுல் செய்வது அல்ல.

மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள் செய்யக்கூடாது. நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் எவ்வளவோ உள்ளது. 108 தொலைபேசி அழைத்தால் 108 அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்து சென்று பிரசவம் பார்த்து மீண்டும் வீட்டுக்கே வந்து விடும் வசதி உள்ளது. யூடியுப் மூலம் மகப்பேறு பார்ப்பது என்பது ஒரு சாகச விஷயம். இது போன்ற சாகசங்களை மக்கள் செய்ய வேண்டாம். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |