கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது பெயர் வெங்கடேசன். பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியில் எனது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எனது மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்டோபர் 14-ஆம் தேதி எனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்ட எனது மனைவியை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். தொடர்ந்து அவருக்கு வயிறு வலி இருந்ததால் நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு எனது மனைவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடல் பகுதியையும், வயிற்றையும் ஒன்றாக வைத்து மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்திருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் ஜிப்மர் மருத்துவர்கள் அதனை குணப்படுத்தினர். எனவே தவறான சிகிச்சை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.