மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். இவர் இரு நாட்டு உறவை வலுப்படுத்திடவும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இருக்கிறார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலிலுள்ள 2 முக்கியமான அண்டை நாடுகளுடன் இந்தியா தன் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இரு நாடுகளுக்குமான பயணம் பார்க்கப்படுகிறது.அந்த வகையில் மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமக முடித்துவிட்டு அங்கிருந்து அவர் 3 நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். அதன்பின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி இலங்கையின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்தார். இந்நிலையில், நடைபெற்ற 18-வது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி(பிம்ஸ்டெக்) கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில், “நம் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறிப்பாக இணைப்பு, ஆற்றல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நம்முடைய அர்ப்பணிப்பு உணர்வை வலியுறுத்துகிறேன். குறிப்பாக துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து, கட்டம் இணைப்பு மற்றும் மோட்டார் வாகனங்கள் இயக்கம் போன்றவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்போம். பின் பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம், நாடுகடந்த குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை நாம் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும்.
உச்சிமாநாட்டில் நம் சாசனம் மற்றும் முக்கியமான திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன்” என்று அவர் உரையாற்றினார். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கியமான உறுப்பினர்களுடனும் அவர் உரையாடுவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, அதில் இருந்து மீள வழி தெரியாமல் போராடி வரும் இலங்கைக்கு, பொருளாதார மீட்பு நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.