வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் பிப்ரவரி மாதத்திற்கான ICC -யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின்போது ஸ்ரேயாஸ் அய்யரின் வெறித்தனமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் விருத்தியா அரவிந்த், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி போன்றோரை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் அய்யர் பெற்றுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர், அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்தது, அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
மேலும் இவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் அசத்தி வருகிறார். அதாவது 3 போட்டிகளில் 204 ரன்கள் குவித்த அய்யர் 174.36 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இதையடுத்து பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர் (21), பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதில் கெர் இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்ததால் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.