பின்னோக்கி நகர்ந்த லாரி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டியில் இருக்கும் சர்க்கரை ஆலையிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சரக்கு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோபால் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி சாலையில் இருக்கும் அரசு வாணிப கிடங்கில் சர்க்கரை மூட்டைகளை இறக்குவதற்காக கோபால் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென லாரி பின்னோக்கி நகர்ந்ததால் கோபால் பிரேக் பிடித்துள்ளார்.
அதற்குள் லாரி பின்னோக்கி நகர்ந்து மரத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் கோபாலுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.