தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் தொகை பிஎம் கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதிசெய்த பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே பயனர்கள் பொதுசேவை மையம் (அ) தங்களுடைய கைபேசி மூலமாக அவர்களாகவே ஆதார் எண்ணை பின்வரும் முறைகளில் உறுதிசெய்துகொள்ளலாம்.
# உங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்துக்கு சென்று, தன் பெயரை அந்த திட்டத்தின் இணையதளத்தில் e-KYC செய்யவேண்டும்.
# இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் உங்கள் கைபேசி எண்ணுக்கு வரக்கூடிய ஒருமுறை கடவுச்சொல்லை இணையத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யவும்.
# அத்துடன் பொதுசேவை மையத்திலுள்ள கருவியில் பயனர்கள் தங்களது விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்யலாம்.
# அதன்பின் http://pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்தில் ஆதார் e-KYC என்ற பக்கத்துக்கு சென்று ஆதார்எண்ணை உறுதிசெய்துக் கொள்ளலாம்.
# இதுகுறித்து கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்களது வட்டார வேளாண்மை (அ) தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புக்கொள்ளலாம்.