கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகிலுள்ள நெட்டார் கிராமத்தில் பிரவீன் நெட்டார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையில் இறைச்சி கடைக்கு வந்து மாலை வீடு திரும்புவார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம்போல் இறைச்சி கடைக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்றார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அறிவால், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுதீ போல் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் கொதிப்படைந்த பா. ஜனதாவினர் மற்றும் விஷ்வ இந்து பிரஷத் அமைப்பினர் பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா, சுள்ளியா, புத்தூர் ஆகிய தாலுகாக்களில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர்.
அதன்படி தாலுகாவின் முழு அடைப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து புத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்து பிரவீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆம்புலன்சை நகர விடாமல் இந்து அமைப்பினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் பிரவீன் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். அதன் பிறகு போலீசார் கூட்டத்தினரை நோக்கி ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்படி எச்சரித்தனர். ஆனால் யாரும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் கோஷமிட்டனர். அது மட்டுமில்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், ஸ்கூட்டர்களை அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தட்சிணா கன்னடா மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில சிறப்பு படையினர், அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் என ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.