தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு முன்பு லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக பால் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தங்களது பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். பால்விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் பால் விலை உயர்வால் டீ விலை 15 ரூபாய் வரையும் காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. இதனால் டீ காபி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.