புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம் “விக்ரம் வேதா”. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் கலந்துகொண்டார். அப்போது அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆர வாரம் செய்தனர். இதற்கிடையில் திடீரென்று ரசிகர் ஒருவர் மேடை மீது பாய்ந்து ஹிருத்திக் ரோஷன் அருகே வந்து அவர் காலை தொட்டு வணங்கினார். உடனடியாக ஹிருத்திக் ரோஷனும் அந்த ரசிகரின் காலை தொட்டு கும்பிட்டதோடு மட்டுமின்றி, அவரை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஹிருத்திக் ரோஷனை பாராட்டி வருகின்றனர்.