கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2,500 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கால் பாலியல்தொழில் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்ததால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று அவர் கூறியுள்ளார். பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா என்பதை அவர் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டார்.