கல்லூரி மாணவி மற்றும் பேருந்து கண்டக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கண்டக்டரான தியாகராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவரது குடும்பத்திற்கும் 20 வயதுடைய கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி முடிந்து அரசு பேருந்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பேருந்தில் இருந்து இறங்க சிறிது தாமதமானதால் அந்த மாணவியை தியாகராஜன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்தில் வந்த மாணவிகள் தியாகராஜனுடன் தகராறு செய்தனர். இந்நிலையில் தா.பழூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியாகராஜன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க என்றபோது தியாகராஜன் எனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கடந்த 8-ஆம் தேதி பேருந்தில் வந்த என்னை தியாகராஜன் பாலியல் சீண்டல் செய்ததாக அந்த மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக மாணவி மற்றும் அவரது உறவினர்களான அரவிந்த், ஸ்வேதா, கஸ்தூரி ஆகியோர் மீது தியாகராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் மாணவி, தியாகராஜன், ஸ்வேதா, அரவிந்த், கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.