சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாலம் இடிந்து விழுந்ததற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் சாலை பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி அன்று இடியுடன் கூடிய மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்த அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாக சுல்தான்கஞ்ச் எம்எல்ஏ லலித் நாராயணன் மண்டல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை நிதி அமைச்சருமான நிதின் கட்கரி பேசியபோது, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி பீகார் மாநிலம் சுல்தான் என்னும் இடத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதற்கான காரணத்தை எனது செயலாளரிடம் கேட்டேன். அதற்கு அவர் பலமான சூறைக் காற்று வீசியதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறியுள்ளார்.
இது மாதிரியான காரணத்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி எப்படி நம்புகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பலத்த சூறைக்காற்று காரணமாக பாலம் இடிந்து விழும் என என்னால் நம்பமுடியவில்லை. மேலும் பாலம் இடிந்து விழுவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்திருக்கவேண்டும் தரத்தில் சமரசம் செய்யாமல் பாலங்களின் கட்டுமான செலவை குறைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.