லண்டனின் நதியில் குதித்த பெண்ணை காப்பாற்றுவதற்க்காக இருவர் குதித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தேம்ஸ் நதியில் குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றும் நோக்கில் குறித்துள்ளார். இருவரும் குதித்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்த மற்றொருவரும் அந்த பாலத்தில் இருந்து நதியில் குதித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு படகு மூலம் விரைந்து சென்று பாலத்தில் இருந்து குதித்த மூன்று நபர்களையும் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து முதலில் குதித்த பெண்ணையும், கடைசியாக குதித்த நபரையும் மீட்புக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால் இரண்டாவதாக குதித்த நபரை மீட்க முடியாமல் போனது. இந்நிலையில் அந்த நபரின் சடலம் நேற்று தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.