பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல் 101 ரூபாயை கடந்து விட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு 10 கிலோ பார்சலுக்கு ரூபாய் 150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேலம் நெல்லை இடையேயான கட்டணம் கிலோ 160 ரூபாயில் இருந்து 180 ரூபாயாகவும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.240 இருந்து 280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தேவைக்காக பார்சல் அனுப்பும் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.