மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற உத்தரப்பிரதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை, அம்பத்தூர் நேரு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் பிரம்மா(26). இவருடைய மனைவி 22 வயதுடைய ரஷியா கத்துனா. இவர்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் திருமணமாகி சென்னைக்கு வந்துள்ளார்கள். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஹரிஷ் பிரம்மா வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று ரஷியா கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள்.
இது குறித்து அம்பத்தூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ரஷியா கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகவலை அறிந்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக ரஷியா வேறு சில ஆண்களுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் கோபத்தில் கட்டையால் அடித்து விட்டு வேலைக்கு சென்று விட்டேன். அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரஷியா சுய நினைவு இல்லாமல் இருந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன் என்று வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து காவல்துறையினர் இதை கொலை வழக்காக மாற்றி ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.