ஆப்கானிஸ்தான் நாட்டில் போதை பொருள் தயாரிக்க உதவும் பாப்பி செடிகளின் சாகுபடிக்கு தலீபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்களை தலீபான்கள் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கோதுமை சாகுபடிக்கு பதிலாக அதிக வருமானம் வரக்கூடிய பாப்பி செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பாப்பி செடிகள் மூலம் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். இதனால் இந்த பாப்பி செடிகளின் சாகுபடியை தடை செய்ய உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக தலீபான் அரசு மீது உலக நாடுகள் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச சமூகத்தின் நற்பெயரை பெறுவதற்காக போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து தலீபான் அரசின் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா உத்தரவிட்டார். மேலும் தலீபான் அரசின் இந்த உத்தரவை மீறுவோருக்கு ஷரியா சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.