உத்தரபிரதேசம் மாநிலம் சிராவ்லி காஸ்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களது 1 1/2 வயது பெண் குழந்தையை தூக்கிகொண்டு சிகிச்சைக்காக பெற்றோர் சென்றுள்ளனர். அந்த குழந்தை பாப்கார்னை சாப்பிட்டதில், அது தொண்டையில் சிக்கி இருந்தது. இதனால் அவசர சிகிச்சையளிக்க சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இரவு பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தா மருத்துவமனையில் இல்லை. இதையடுத்து தகவலறிந்து 1 மணிநேரத்திற்கு பின் மதுபோதையில் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அதன்பின் சிகிச்சையளித்தபோது குழந்தை உயிரிழந்து விட்டது. அதனை தொடர்ந்து அந்த மருத்துவர் குழந்தையின் தாயாரிடம் வேறொரு குழந்தையை பெற்றுகொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் கிராம வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் மருத்துவர் குப்தாவை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நீலம் குப்தா பணியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 3 மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ் குமார் கூறியதாவது, குழந்தையின் உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டுகளின்படி மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் குற்றச்சாட்டுகள் உண்மையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.