பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் மசூதி இடிப்பு ஒரு திட்டமிட்ட செயல் கிடையாது.அது திடீரென நடைபெற்ற செயல் என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பற்றி ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது கருத்தை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இன்றைய தினம் வரலாற்றில் மிகச் சோகமான தினம். நீதிமன்றம் இது சதி செயல் இல்லை என்று கூறியுள்ளது. இதற்கு எத்தனை நாட்கள் மற்றும் எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும் என்று கூறுங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த பாஜக அவர்கள் அனைவருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தது”என்று அவர் கூறியுள்ளார்.