பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. கடந்த ஆண்டு மார்ச் 31, ஜூன் வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக இந்தாண்டு மார்ச் 31 வரை பான் கார்டு, ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும்.
மேலும், செயலிழந்த பான் கார்டுகளை 2021 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது. பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின்படி, பான் கார்டை ஆதாருடன் இணைக்காத நபர்களிடம் குறைந்தது ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பால் பதறிய பலரும் ஆதாரை பான் கார்டுடன் இணைக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக இன்று கடைசி நாள் என்பதால் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் வருமான வரி இணையத்தை அணுகியதால் அந்த சர்வர் காலையில் இருந்தே முடங்கியது. இதனால் பலரும் அபராதம் கட்ட வேண்டும் என அச்சமடைந்தனர். இதனிடையே தற்போது பான், ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.