ஜார்கண்ட் மாநிலத்தில் பாட்னா அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் ஒருவர் பாம்பினை கழுத்தில் மாலையாக சுற்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் சாமி கும்பிடுவதற்கு வீட்டிலிருந்து புறப்பட்ட ரூனியா தேவி என்ற பெண், வழியில் பாம்பை பார்த்து அது கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாம்புக்கு தீபாராதனை காட்டி அதை ஏதோ மலர் மாலை போல எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பக்தி பரவசத்தோடு பூஜைகளை நடத்தினர். சாமி பாடல்களை பாடியும் நடனம் ஆடியும் கிராமத்தினர் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்த போது அந்த பாம்பு ரூனியாவை கொத்தியது. அதன் பிறகு விஷம் உடல் முழுக்க பரவ மயங்கி விழுந்த அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அந்த கிராமத்திலிருந்த மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த மந்திரவாதி கிராமத்தில் இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் அந்த பெண் உயிரை விட்டுள்ளார். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து இருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மூடநம்பிக்கையின் உச்சத்தால் பெண் உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.