சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதுரைக்கு பயணிகள் செல்ல விமானம் தயாரான நிலையில் இருந்தது. அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் செல்பவர்களின் உடமைகளை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் கைப்பையை ஸ்கேன் செய்த போது அப்பையில் வெடிகுண்டு இருப்பது போன்றது மணி அடித்தது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை எடுத்து திறந்து பார்த்த போது கைத்துப்பாக்கி யில் பயன்படுத்தப்படும் 15 குண்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதிலுள்ள ஒவ்வொரு துப்பாக்கி குண்டுகளும்7.53 எம்.எம் ரகத்தை சேர்ந்தது என்றனர். இந்த துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருஷ்ணகுமாரின் விமான பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
பின் தொழில் அதிபரான கிருஷ்ணகுமாரிடம் விசாரித்தபோது தனது பாதுகாப்புக்காக சரியான உரிமம் பெற்று வைத்திருப்பதாகவும், தூத்துக்குடியிலிருந்து காரில் வரும்போது தெரியாமல் இந்த கைப்பையை எடுத்து வந்ததாகவும், தூத்துக்குடிக்கு மதுரை வழியாக விமானத்தில் செல்லும் போது தவறுதலாக இந்த பையை எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விமான நிலைய காவல்துறையினரிடம் கிருஷ்ணகுமார் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிருஷ்ண குமாரிடம் சரியான ஆவணங்கள் இருந்ததால் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அந்த காவல்துறையினர் அவரை அனுப்பிவைத்தனர்.