தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015 ஆம் ஆண்டில் சந்தித்த பாதிப்பை விட தற்போது மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர், பால் மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படை தேவைகள் கூட அவர்களுக்குக் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் 6 நாட்கள் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர் சிறையில் அடைபட்டு கிடப்பது உலக ரீதியாக கொடுமையானது. எனவே சென்னையில் பல பகுதிகளில் தேங்கி உள்ள நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றி மக்களுக்கு மாநகராட்சி மற்றும் தமிழக அரசு நீர்ச் சிறையில் இருந்து விடுதலை தர வேண்டும்.
அதனை தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் காலம் தவறி மழை பெய்ததால் நெல் மற்றும் வாழை போன்ற பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் அவர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் மட்டுமே அவர்களால் இழப்பை ஈடுசெய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டில் சம்பா பருவத்தில் பெய்த கனமழையால் அவர்களுக்கு மீண்டும் இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு தமிழக அரசு இந்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் குழுவை காவிரி டெல்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் ஆய்வை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் சென்னை மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதார இழப்புகள் மற்றும் உடைமை இழப்புகளை இழந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.