கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசரி தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதில் செல்வராஜின் உறவினர் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். இவர் செல்வராஜின் மகள் வசித்து வரும் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. இதன் காரணமாக தன் மகளுக்கு சில பொருட்களை அந்த உறவினர் வாயிலாக கொடுத்து அனுப்ப செல்வராஜ் முடிவு செய்தார். இதையடுத்து ரூபாய் 2,258 மதிப்புள்ள சில பொருட்களை திருவனந்தபுரத்திற்கு அனுப்புவதற்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் கொடுத்தார்.
இதற்கென ரூபாய் 200 கட்டணமும் செலுத்தினார். ஆனால் பல தினங்கள் ஆகியும் அந்த பார்சலானது திருவனந்தபுரம் சென்றடையவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பார்சல் நிறுவனத்திடம் கேட்டபோது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் பார்சலை அனுப்ப முடியவில்லை என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பார்சலை திருப்பி தரும்படி நிறுவனத்திடம் செல்வராஜ் தெரிவித்தார். எனினும் கூரியர் நிறுவனமானது அந்த பார்சலை திருப்பி கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மனவேதனையடைந்த செல்வராஜ் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் போன்றோர் கூரியர் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட செல்வராஜூக்கு கொடுக்க வேண்டிய பொருட்களின் விலை ரூபாய் 2,558-ஐயும், ரூபாய் 5,000 அபராதத்தையும் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனம் வழங்க உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு செலவு ரூபாய் 2,500-ம் கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.