கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக கட்சியைச் சேர்ந்த பரத் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய காரின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பரத் மற்றும் அவருடைய மனைவி ஜெயஸ்ரீ விரைந்து வந்து பற்றி எரிந்த காரை அணைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல்துறையினருக்கு பரத் தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இரவு முழுவதும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.