நாட்டில் ஏற்படும் கலவரங்களை ஒழிக்க டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் பேசியுள்ளனர்.
நாடுமுழுவதும் கலவரங்களை ஏற்படுத்துவதும், மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுமே பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று ஆவேசமாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தா கூறியுள்ளார். இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் பாஜக அலுவலகத்தையும் அமித்ஷா வீட்டையும் இடித்து தரைமட்டம் ஆக்குவது தான் ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லி ஜஹாங்கீர் போர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடு, கடைகளை இடித்து வருகிறது டெல்லி மாநகராட்சி. இதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ராகவ் சத்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், நாடு முழுவதும் பாஜகவினர்தான் கலவரங்களையும், வன்முறைகளையும் திட்டமிட்டு கட்டவிழ்த்து வருகின்றனர். இப்பொழுது புல்டோசர்கள் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். நாமும் பதிலுக்கு அவர்களுக்கு புல்டோசர்களை வைத்துதான் பேசவேண்டும். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தையும் அமித்ஷா வீட்டையும் இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைகளும் கலவரங்களும் ஓயும் என்று அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.