சென்னையில் உள்ள தாம்பரத்தில் பாஜக கட்சியின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக பாஜக தொண்டர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
இதேபோன்று ஈரோட்டில் 2 இடத்திலும், திருப்பூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை ஏற்க முடியாது. இதற்கு பாஜக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை தமிழக அரசு யோசித்துப் பார்க்க வேண்டும். தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்குவதற்கு பாஜக தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும்.
ஆனால் பாஜக கட்சி அமைதியை விரும்புவதால் காவல்துறையை நம்புகிறோம். நாங்கள் டிஜிபியை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன். தமிழக அரசு பிரிவினைவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடந்து 3 நாட்கள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யவில்லை. கோயம்புத்தூரில் மாபெரும் போராட்டம் நடைபெறும். இது அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். தமிழக முதல்வர் காவல்துறைக்கு சுதந்திரம் கொடுத்து பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.