நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்த நீட் ஏன் நாம் எதிர்க்க வேண்டும், ஏன் இந்த நீட் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதை என்னை விட மிக சிறப்பாக நம்முடைய அருமை சகோதரர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மிக விளக்கமாக மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் எளிய முறையில் சொல்வார்கள். நானும் இதே இடத்தில் இந்த நீட்டுக்காக பல போராட்டங்களை, பல ஆர்ப்பாட்டங்களை, பல கூட்டங்களை நாம் நடத்தி இருக்கிறோம்.
ஆனால் நம்முடைய உணர்வுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற இந்த பாசிச பாரதிய ஜனதா அரசு மதிப்பளிக்கிறதா என்று சொன்னால் மதிப்பளிக்கவில்லை. குறிப்பாக இங்கே அமர்ந்திருக்கின்ற இந்த மாணவச் செல்வங்களின் முகங்களை நீங்கள் பாருங்கள், இந்த மாணவர்கள் பணக்கார பெரும் வசதி படைத்த, மேல்தட்டு மாணவர்களோடு அவர்கள் படிக்கின்ற தனியார் பள்ளிகள் படிக்கின்ற மாணவர்களோடு, அவர்கள் வசதி வாய்ப்பு, சூழல் இவற்றோடு முகம் கொடுத்து, நாம் அவரோடு போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இங்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை நாம் படிக்கின்ற இந்தக் கல்வி முறையில் இந்தப் பாடத்திட்டத்தில் இருந்து இந்த நீட்கான அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் என்று சொன்னால் அதுவும் இல்லை, ஒரு சமமான கல்வி முறை இங்கு இல்லாத போது, சமமற்ற ஒரு கல்வி முறையை இங்கு இருக்கின்ற போது, இந்த மத்திய அரசே நம்முடைய மாணவச் செல்வங்களை வடிகட்டுவதற்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களை, கிறிஸ்துவ மக்களை, இஸ்லாமியர்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, சூத்திரர்கள் என்று சொல்லக் கூடியவர்களை இந்த கல்வி நிலையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு இந்த நீட் என்கின்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற அரசு உதவி பெறும் உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற, வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கான இடங்கள் கிடைக்கப் பெற்று வந்தன. இப்போது அவர்கள் சி.பி.எஸ், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், இன்டர்நேஷனல் பாடங்கள் என்று பல்வேறு கல்வி முறையிலே இன்றைக்கு படிக்கின்ற அந்த மாணவர்களோடு நம்மையும் ஒப்பிட்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
அந்தத் தேர்வும் முறையானது நம்முடைய கல்வி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு நடத்தப்படுகிறதா ? என்று சொன்னால் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய கல்வி பாடத்திட்டத்தில் இருக்கின்ற கேள்விகள் இடம்பெறுமே தவிர முழுக்க அப்படி இடம்பெறவில்லை. நீட்டை கொண்டு வந்தால்தான் மருத்துவத் துறையில் மகத்தான சாதனை படைக்க முடியும் என்று அவர்கள் பொய் சொல்கிறார்கள்.
நாம் என்ன சொல்கிறோம் சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்து மருத்துவ துறையில் மகத்தான சாதனையை படைத்தை வருகின்ற மாநிலம் நம்முடைய தமிழகம், இந்தக் கல்வி முறையில் தான் எமது முன்னோர்கள் மருத்துவர்கள் ஆனார்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கி இன்றைய மாணவர் சமூகம் வரையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் படுகின்ற ஆயிரக்கணக்கான தமிழ் சமூகம் மாணவர்கள் எல்லாம் இந்த தமிழக அரசின் கல்வி முறையில் படித்து தான் இன்றைக்கு சிறப்பான மருத்துவத்தை தந்து கொண்டிருக்கிறார்கள்.