பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான நவாஸ் செரிப் மீது பனாமா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 130 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018-ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக நவாஸ் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்தார். ஆனால் கீழமை நீதிமன்றம் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக நவாஸ் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி நவாஸ்க்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்தார். கடந்த 2019-ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நவாஸ் தாய்நாடு திரும்பவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது நவாஸ் செரிப்பின் தம்பி ஷெபாஸ் செரிப் பிரதமராக இருப்பதால் நவாஸ் மீண்டும் தாயகம் திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய மந்திரி ஜாவித் லத்தீப் இம்ரான் கானுக்கு எதிராக அரசியலை வலுப்படுத்துவதற்காக நவாஸ் விரைவில் தாயகம் திரும்பவுள்ளார் என்று கூறியுள்ளார்.