மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீராங்கனைகள் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இதில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் தாய்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை சாமரி அதபத்து 10 ரன்களில் அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனி 26, ஹர்ஷிதா 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மேலும் நிலாக்ஷி டி சில்வா 14, ஹாசினி பெரேரா 13, ஓஷதி ரணசிங்க 8, கவிஷா தில்ஹாரி 7*ரன்கள் எடுக்க இறுதியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 18, சித்ரா அமீன் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் பிஸ்மா மரூஃப் சிறப்பாக ஆடி 42 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன்பின் ஒமைமா சோஹைல் 10 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் நிடா தார் பொறுப்பாக ஆடினார்.. பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்றது. இறுதியில் கடைசி இரண்டு ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அப்போது ரணவீரா வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆயிஷா நசீம் (2) ஆட்டமிழந்தார். அதுமட்டுமில்லாமல் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அச்சினி குலசூரியா 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. கடைசி 1 பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட நிடா தார் (26 ரன்கள்) அடித்து 1 ரன் எடுத்துவிட்டு 2ஆவது ரன்னுக்கு ஓட கீப்பரால் ரன் அவுட் ஆனார்.. அலியா ரியாஸ் 2 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.. நிடா தார் சோகத்தில் மைதானத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டார். பெவிலியனில் இருந்த சக வீராங்கனைகளும் சோகத்தில் மூழ்கினர்.. அதேநேரத்தில் மைதானத்தில் துள்ளிக்குதித்து வெற்றியை இலங்கை அணி கொண்டாடியது.. இதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு சென்ற மகிழ்ச்சியில் இலங்கை வீராங்கனைகள் வரிசையாக நின்று சூப்பராக ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகிறது.
#ApeKello celebrating in style 💃
Sri Lanka qualified for the finals of the Women’s #AsiaCup2022 after winning against Pakistan by 1 run. pic.twitter.com/WXHkGcQJdd
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 13, 2022