பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்குமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலைபாண்டி தலைமையிலான பொதுமக்கள், பழைய குற்றாலம் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்கள்.
அதில் அவர் கூறியிருந்ததாவது, சாரல் மழை ஆரம்பித்து சுமார் 15 நாட்களான நிலையில், அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகின்றது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு பின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி குற்றாலம் மெயின் அருவி, புலியருவி , சிற்றருவி ஐந்தருவி உள்ளிட்டவைகளில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆகையால் இரவிலும் குளிக்க அனுமதி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அருவியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்களிலிருந்து பயணிகளை இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து வர ஆட்டோக்கள் இயங்கி வந்த நிலையில் போலீசார் ஆட்டோக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆகையால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விரைவிலும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அனுமதி வழங்காத பட்சத்தில் வருகின்ற 15ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட இருப்பதாக அதில் கூறியுள்ளனர்.