மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 22 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டுள்ளது . இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிக பாரம் இருந்ததால் லாரியை அப்புறப்படுத்த இயலவில்லை. இதனால் ஜாக்கிகள் மூலம் லாரியை தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு 22 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின் ஜாக்கிகள் அகற்றப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.