பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக கோவில்களுக்கு மக்கள் இயல்பாக சென்று வர அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தை மாதத்தில் முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதனால் பழனி கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளது.