வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுத பாணி சாமி திருக்கோயிலின் மலைக் கோயிலில் வரும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி, பரணிநட்சத்திரத்தில் சந்திரகிரகணம் மாலை 5.47 மணிக்கு துவங்கி 6.26 மணிக்கு முடிவடைவதால் அன்றையதினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கபடும். அத்துடன் அன்று காலை 11:30 மணி முதல் படிப் பாதை, யானைபாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதன்பின் இரவு 7 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.