திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்துர் கிராமத்தில் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே 4 வயது சிறுவன் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அவருடைய மகன் சர்வேஷ். இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் பள்ளி நேரம் முடிந்து மீண்டும் பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். முதல் நாள் என்பதால் வேன் வரும் நேரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுவன் இறங்கிய பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்காக ஓட்டுநர் வேனை பின் நோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது சிறுவன் பின்னால் நின்றதை கவனிக்காமல் இயக்கியதால் பின்பக்க சக்கரம் ஏறி தலை நசுங்கி சர்வேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளி வாகன ஓட்டுநர் தமிழ்ச்செல்வனை கைது செய்துள்ளனர்.மேலும் உதவியாளர் இன்றி பள்ளி நிர்வாகம் வேனை இயக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.