பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். பள்ளியிலும் பாதுகாப்பு இல்லை என்று உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை இருந்தது.
ஆனால் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை யார் கொடுத்தார்கள் என்பது குறித்த பெயர்கள் எதுவும் இடம் பெறாத காரணத்தினால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணையை துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் மிகுந்த வேதனையைத் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மாணவிகள் தயவு செய்து தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.