தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்கள்நூலகம் உங்கள் கையில் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகளுக்கு வரவேற்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம். கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வதை தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தங்களின் சமூக பொறுப்புணர்வு வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நேரடியாக பெற்றோர்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 1098, 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள் இனி அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.