பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மழலையர் பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்ற நிலையில் இரண்டு மகள்களும் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் வழக்கம் போல் நேற்று காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்து வீட்டின் முன் பக்க கதவை திறக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் பூட்டு திறக்கவில்லை. ஏன் திறக்க முடியவில்லை என பார்த்தபோது பூட்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த பொழுது கதவு திறந்து கிடந்தது. இதனால் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு, துணிகள் ஆங்காங்கே இருந்துள்ளது. பின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 1/2 பவன் தங்க நகை காணவில்லை. இதனால் இது குறித்து போலீஸிடம் புகார் கொடுத்தார்கள். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.