சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதனைப் போலவே கல்லூரி மாணவர்களுக்கும் விடுதிகள் உள்ளன. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. இவற்றில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் சேர்ந்து கொள்ளலாம். அதில் சேர்வதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.
அனைத்து விடுதி மாணவ மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விடுதியில் சேர்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் தொலைவு 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த விதி மாணவியருக்கு பொருந்தாது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை எண் 110இல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் ஜூலை31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது இனம் மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஆகியவற்றை சேர்க்கையின்போது அளிக்க வேண்டும். மேலும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படும் போது ஒவ்வொரு விடுதியிலும் எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்களின் படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலலாம். இது தொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0427-2451333 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.