அமெரிக்க நாட்டின் டெக்சாஸ்மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் எனும் பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது காலை 11:30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இதற்கிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் அதிகாரிகள் 2 பேர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனே அங்கு விரைந்தனர்.
அவர்கள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர். இந்நிலையில் அந்த இளைஞர் காவல்துறையினரையும் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். அதன்பின் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிய நபர் பள்ளிக்கூடம் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த 18 வயதான சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. இந்தசம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது நடந்து 2 நாட்கள் கூட ஆகாத சூழ்நிலையில், ரிச்சர்ட்சன் பகுதியிலுள்ள பெர்க்னர் உயர்நிலை பள்ளிக்கு மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். இதனை கவனித்த சிலர் ரிச்சர்ட்சன் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடனே காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய மாணவன் பெர்க்னர் உயர்நிலை பள்ளியில் பயின்று வருபவன் என தெரியவந்துள்ளது. ஆனால் அந்த மாணவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. பின் ஈஸ்ட் ஸ்பிரிங் வேலி சாலை பகுதியில் நிறுத்தி இருந்த மாணவனின் வாகனத்தில் சோதனை செய்ததில், ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. ஆகவே ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி இல்லாத பள்ளி பகுதியில் அதனுடன் சுற்றி திரிந்த விதிமீறலுக்காக மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் மாணவரின் வயது உள்ளிட்டவற்றை முன்னிட்டு வேறு எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. சென்ற 2 நாட்களுக்கு முன் டெக்சாசில் பள்ளி ஒன்றில் ஆயுதமேந்திய 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்ட சூழ்நிலையில், பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதிகரித்துவரும் துப்பாக்கிகலாசாரம் குறித்து அதிபர் ஜோபைடனும் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பெர்க்னர் உயர்நிலைபள்ளி மற்றும் அருகிலுள்ள ஸ்பிரிங்ரிட்ஜ் பள்ளிகூடம் போன்றவை அமைந்த பகுதியில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.