போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து காங்கேயம் க்ராஸ் ரோடு பகுதி வரை பெரிய கடைவீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் பெரிய கடைவீதி பகுதிக்கு வந்தனர். அதன் பிறகு சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சில கடைகளின் மேற்கூரையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணிகள் தடையின்றி நடைபெற்றது. அதன் பிறகு சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். மேலும் நொய்யல் தெருவில் உள்ள சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.