பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கும்பகோணம் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் கபிலன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று கபிலன் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கபிலன் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்துள்ளார்.
அப்போது திடீரென கபிலன் நிலைதடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த கபிலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.