புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தடுப்பூசி போட்டால் மட்டுமே ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் உடன் ஆன்லைன் வகுப்புகளும் தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை மதிய உணவு வழங்கப்படும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளிகள் செயல்பட்ட பிறகு மதிய உணவு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.