தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிய முதல் நாளிலேயே போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஒரே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அண்மையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை ஓட்டுநரும் நடத்துனரும் கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மண்டல போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்களுக்கும் அனுப்பியது.
இருப்பினும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மிகக் குறைவான பேருந்துகள் இயக்கம், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் சேவை இல்லாமை போன்றவை இப்படி படிக்கட்டு பயணம் செய்வதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. இதனால், சில நேரங்களில் விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இதற்கான உரிய தீர்வை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.