லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி முதல் காரைமேடு வரை புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன் என்பவர் வீட்டில் இருந்து வயல்வெளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கவனிக்காமல் வந்துள்ளார். இதனால் லாரி பள்ளத்தில் இறங்கி ஏறிதோடு நடேசன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முற்றுகையிட்டனர். பின்னர் புறவழி சாலையில் பள்ளம் தோண்டினால் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். நடேசனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.