கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் உறவினர்களான முருகேசன், பிச்சை ஆகியோருடன் என்.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த முருகேசன் மற்றும் பிச்சை ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.