பேப்பர் போர்டு விலை அதிகரித்ததால் 50,000 தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ‘தி இன்டஸ்டரியல் பேப்பர் கோன் அண்ட் டியூப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்’ சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் இளங்கோ தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் செயலாளர் குப்புசாமி, துணை தலைவர் செல்வம், பொருளாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் பேசி உள்ளார்கள். மேலும் கிராப்ட் போர்டு பேப்பர் மில் அசோசியேசன் மாநில தலைவர் செங்குட்டுவேலன் உட்பட பலர் பங்கேற்றார்கள்.
இதையடுத்து செயலாளர் குப்புசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, கோன், டியூப்ஸ் உற்பத்தி செய்வதற்கு பேப்பர் போர்டு விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமமாக இருக்கின்றது. ஒரு டன் பேப்பர் போர்ட் ரூபாய் 22 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தற்போது ரூபாய் 43 ஆயிரத்திற்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக விலை கொடுத்து பேப்பர் போர்டு வாங்கி கோன் தயாரித்து விலையை உயர்த்தி கொடுத்தால் நூற்பாலையினர் வாங்க மறுக்கிறார்கள்.
இதனால் நாங்கள் தொழிலை நிறுத்தி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நூற்பாலையினர்கள் ஒத்துழைப்பு செய்தால் மட்டுமே நாங்கள் தொழிலே செய்ய முடியும். தமிழகம் முழுவதும் 200 நிறுவனத்தினர் கோன் டியூப்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் 30 சதவீத நிறுவனத்தினர் தற்போது கோன், டியூப்ஸ் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்சமயம் முழு அளவில் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாது. இன்று(நாளை ) நடைபெற்ற கூட்டத்தில் ஒரு கோன் 4 ரூபாய் முதல் 4 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.