பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறையும், திமுக 2 முறையும் கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவில் நடராஜன். பல்லடம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,87,111 ஆகும். பல்லடம் பகுதியில் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பல ஆண்டு கால எதிர்பார்ப்பாக உள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும், சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை மற்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பிஏபி பாசனத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காடாத்துணியை விற்பனை செய்ய தனி சந்தை உருவாக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கையாகும். கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தொழில்முனைவோரின் விருப்பமாக உள்ளது. புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அரைகுறையாக நிற்கும் மின்மயான கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.