பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கியூசன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழக வாளகத்துக்குள் நெரிசலான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த குறுகிய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிராமப்புறங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக வந்த எண்ணற்ற ஏழை குடும்பங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது இந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது. ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீப்பற்றியதில் வானுயரத்துக்கு புகை மண்டலம் எழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், குடியிருப்பில் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இதனை அடுத்து வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் தீப்பற்றி எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த நெரிசலான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி தவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வந்தனர். இதில் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் வந்தது.
மேலும் இந்த கோர விபத்தில் சுமார் 80 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் சிக்கி 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.