Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பறவைகளுக்காக” பட்டாசு வெடிக்காமல் தீபாவளி…. கொண்டாடும் கிராம மக்கள்…!!

பறவைகளின் பாதுகாப்பிற்காக பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தியுள்ளனர்.

நாகை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் அருகே பெரம்பூர் என்கிற கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்து காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளன . மேலும் இங்கு நீர்க்காகம், செந்நாரை, கொக்கு போன்ற பறவைகள் அதிக அளவில் தங்கி இருக்கின்றன. இவை அங்குள்ள மரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகின்றன. இதனால் அக்கிராமம்  பறவைகள் சரணாலயமாக திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பறவைகள் மார்ச் மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பி விடும்.

அதுவரை இந்த பகுதி மக்கள் பறவைகளுக்கு இடையூறு கொடுக்காத வகையில் ஒவ்வொரு வருடமும்  தீபாவளியன்று வெடி வெடிக்க மாட்டார்கள். இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “பெரம்பூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்திருப்பதால் பறவைகள் இனப்பெருக்கத்திற்கும், அவை அங்கு தங்குவதற்கும் ஏற்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. தற்போது வெளிநாட்டு பறவைகளின்  வருகையால் பெரம்பூர் கிராமம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. எனவே நாங்கள் இந்த பறவைகளை பாதுகாப்பதற்காக தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது இல்லை” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |