Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாப தோல்வி அடைச்சுட்டீங்க…! இது தான் உங்களோட மெத்தனம்…. மோடி மீது கடும் தாக்கு …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இந்தியாவைப் பொறுத்தவரை…. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி,  எடப்பாடி அரசாங்கம் இரண்டும் கோவிட்  பெருந்தொற்றை  கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவற்றை விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகும். தேசத்தின் நலன் கருதி, மக்களுடைய நலன் கருதி என்ன தவறுகள் நடந்து இருக்கிறது ? எங்கே சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது ? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியினுடைய கடமை.

முதல் தொற்று அலை ஏற்பட்ட போது பல்வேறு தவறுகள் ஏற்பட்டன. அப்போது சொல்லப்பட்ட காரணம் இதை போல ஒரு பெரும் தொற்றை எதிர்த்து நின்ற பக்குவம் நமக்கு இல்லை, பழக்கம் நமக்கு இல்லை. எனவே அவற்றில் சில நடைமுறை சிரமங்கள் ஏற்பட்டன என்று அரசும்,  ஊடகங்களும், மற்றவர்களும் சொன்னார்கள். ஆனால் பெருதொற்று முதல் அலை முடிந்து ஓராண்டிற்கு பிறகு இரண்டாவது அலை வந்து இருக்கிறது. ஆனால் இந்த இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கத்தால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

மோடி அவர்கள் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்,  பிரச்சாரத்தில் இருக்கிறார். தமிழக காங்கிரஸ் கேட்பது என்னவென்று சொன்னால், இந்த ஓராண்டு காலத்தில் இந்த 130 கோடி மக்களுக்கான தடுப்பூசியை உங்களால் தயாரிக்க முடியவில்லையா ? அதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லையா ? நம்மால் முடியவில்லை என்றால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இருக்கக்கூடாது.

நாம் உற்பத்தி செய்ததை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணம் என்ன?  இவைகளுக்கு மோடி அரசாங்கம் பதில் சொல்லவேண்டும். இந்தியாவினுடைய தொழில்நுட்பம் என்பது உலக வல்லரசுகளுக்கு இணையானது. இன்றைக்கு கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறது. அணுகுண்டை பொருத்தி ஒரு ஏவுகணை இயக்கினால் அது 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய இலக்கை தகர்த்தெறியும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கும் பொழுது, ஒரு தடுப்பு மருந்தை நாம் 130 கோடி மக்களுக்கும் ஓராண்டு காலத்திற்குள் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று சொன்னால், உற்பத்தி செய்யவில்லை என்று சொன்னால் அது அரசினுடைய மெத்தனத்தை காட்டுகிறது, அரசினுடைய செயலின்மை காட்டுகிறது.

நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல…  இந்திய மக்கள் பெரும் தொற்றினால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது நம்முடைய பிரதமர் மயிலுக்கு உணவு வைத்து கொண்டு இருக்கிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஏதோ போகிற போக்கு அல்ல…. ஏதோ உற்பத்தி செய்தார்கள்….  ஏதோ 12 கோடி மக்களுக்கு போட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்…..  130 கோடியில் 12 கோடி என்பது எவ்வளவு என்று புரிந்து கொள்ளுங்கள், அது 10 சதவீதத்தைக் கூட எட்டவில்லை. எனவே இந்த அரசு இதில் விரைந்து செயல்பட்டு இருக்க வேண்டும் என கே.எஸ் அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

Categories

Tech |